புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, January 31, 2018

தூது

'வைகைக்கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கைதனைத் தேடுதென்று
காற்றே! பூங்காற்றே!
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் 
காதோரம் போய் சொல்லு'
என்று 'உயிருள்ளவரை உஷா' திரைப்படத்தில், காற்றைக் காதலன் காதலிக்குத் தூதுவிடுவது போல் டி.ராஜேந்தர் பாட்டு எழுதி இருப்பார். தூது என்று ஒரு தனி சிற்றிலக்கிய வகையே தமிழில் உண்டு.

'ஆடையின்றி வாடையின் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே'
என்று சத்திமுத்தப் புலவர் நாரையைத் தன் மனைவிக்குத் தூது அனுப்புவதைப் பள்ளிக்கூடங்களில் படித்திருப்போம். கிளி கண்ணாடி புகையிலை தமிழ் காக்கை என்று தமிழ் இலக்கியங்கள் தூதுவிட்டிருக்கின்றன. வடமொழியில் கூட தூது உண்டு. காளிதாசர் எழுதிய மேகதூதம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதில் வரும் ஒரு கதையை உங்களுக்குச் சொல்கிறேன். அதை நீங்கள் பொது வெளியில் அப்பாவித்தனமாக மேற்கோள்காட்டி விடாதீர்கள். பிறகு சாமியார்கள் யாராவது உங்கள் மேல் சோடா பாட்டில் வீச நேரிடும். அதாகப்பட்டது, ரந்திதேவா என்ற அரசன் தினமும் 2000 பசுக்களைக் கொன்று அனைவருக்கும் உணவிட்டதால் நாட்டு மக்களிடம் நற்பெயர் பெற்றிருந்தானாம். அப்படி வெட்டப்பட்ட பசுக்களின் இரத்தம், இன்றைய சம்பல் நதியாக ஓடுகிறதாம். ரந்திதேவனுக்கு மரியாதை செலுத்தச் சொல்லி, காதல் தூதைச் சுமந்து போகும் மேகத்திற்கு யக்சன் ஒருவன் சொல்வதாக, மேகதூதத்தில் சொல்கிறார் காளிதாசர்!

ஆளுகின்ற அரசனுக்கு மேகம் தூது போயிருக்கிறது! மக்களாட்சியில் சினிமாக்காரர்கள் கிரிக்கெட்காரர்கள் சாமியார்கள் பணம் கலவரம் என ஆட்சியாளர்கள் மக்களுக்குத் தூதுவிடுவதுண்டு. ஆனால் நமது ஆட்சியாளர்களைப் பார்த்து நம் கஷ்டங்களைச் சொல்வது மக்களாட்சியில் சாத்தியமில்லை. பஞ்சம் என்றால், மத்திய குழு வந்து, நிவாரணம் சொல்லி, நிதி கைக்கு வரும்போது ஒன்றும் மிஞ்சாது; வெள்ளம் என்றால், சொட்டு நீர் கூட தன்மேல் படாமல் மேற்பார்வையிட்டு போகிறார்கள்; புயல் என்றால், அது ஆப்பிரிக்காவை எல்லாம் கடந்தபின் இருபது நாள் கழித்து வருகிறார்கள்; சுனாமி என்றால் ஹெலிகாப்டர் மட்டும்தான். சரி இப்படி தூது அனுப்பி செய்தி சொன்ன நம் முன்னோர்கள் போல், நம் காலத்து ஆட்சியாளர்களுக்கு எப்படியாவது தூது அனுப்ப முடியுமா என்று ஒருநாள் யோசித்தேன். விளைவு இக்கிறுக்கல்கள்:

(ஓகி) புயல்
குஜராத்திற்கு வராமல்
குமரிக்கு மட்டும் போனதால்
தேர்தலுக்குப் பின் வருகிறோம்
புயலுக்குப் பின்னான அமைதி குலைக்க.


துகில்
ஒபாமா பக்கத்தில்
எட்டு லட்சம் கோட்டு போட்டு
ஒய்யாரமாய் நிற்பது கண்டு
துகில் கலைந்து
நிர்வாணமாய்த் திரும்பியது
காந்தியின் கைத்தறி.


மான்
மான்கள் நாங்கள்
கான்கள் நீங்கி
தூதுகள் போயின்
இராமன்கள் துரத்தும்
கான்கள் கொல்லும்.


தென்றல்

தெற்கில் இருந்து
வீசிய தென்றல்
மன்றத்தில் மன்றாடிவிட்டு
திரும்பியது வடக்கில் இருந்து
இந்தி வாடையாய்.


நெஞ்சு

வெந்து விழுந்து
முறிந்து உருகி
கருகி அடங்கிய‌
குஜராத் முஸ்லிம்கள்.
நின்று சிரித்து
வென்று நடக்கும்
ஐம்பத்தாறு அங்குல கவசம்.


மேகம்
எப்போதாவது இந்தியாவிற்கு வந்துபோகும்
அயல்நாட்டு விமானப் பயணங்களில்
போராட்டங்கள் போல்
திரண்டு திரிவதால்
கர் வாப்சி செய்து
திருப்பி அனுப்பப்பட்டன‌
கைலாசத்திற்கும்
வைகுண்டத்திற்கும்
கருந்தோல் மேகங்கள்.

-  ஞானசேகர்

No comments: